Saturday 13 March 2021

காலபைரவாஷ்டகம் (தமிழில்)

ஸ்ரீ காலபைரவாஷ்டகம் எனும் ஸ்ரீ பைரவர் போற்றி அஷ்டகமானது ஸ்ரீகுரு ஆதிசங்கரர் பெருமானால் இயற்றப்பட்ட பெருமைமிக்கதாகும். இப்பாடல் சமஸ்கிருதத்தில் பாடப்பெற்றுள்ளது. அதனை அப்படியே பாடிடும் பொழுது மிகுந்த பலனைத் தரும். குருமார்கள் இயற்றிய ஸ்லோகங்களை அப்படியே பின்பற்றி நடப்பதே சாலச் சிறந்தது என்றாலும், அடியேன் நாமம்,  சிவ ஸ்ரீ குரு கோரக்கர் பெருமானின் திருவடி போற்றுகின்ற அடியார் கூட்டத்தாருள் ஒருவனாம் க.அன்பழகனாகிய எனக்கு ஒரு ஆழ்மன பேராசையின் வெளிப்பாடாக, நீண்ட நாள் எண்ணம் இன்று, 14/03/2021, ஞாயிறு அன்று காலை, ஸ்ரீகாலபைரவாஷ்டகத்திற்கு அதே தொனியில், தமிழில், யாவரும் படித்து, பாராயணம் செய்து பலன் பெற்றிட வேண்டும் என்ற பெரும் ஆசையின் காரணமாக, முதன்முதலில், நமது ஸ்ரீபாப்பையா சித்தர் பெருமானின் இணைய பக்கமான நமது தளத்தில் வெளியீடு செய்வதில், எனது பிறவியின் பயன்களில் ஒன்றை அடைவதாக அகமகிழ்கின்றேன். சிறு தவறுகள் இருப்பினும், அடியார்கள் அருட்கூர்ந்து, பொறுமையுடன் தெரிவிக்கலாம். திருத்திக்கொள்ள பணிவுடன் காத்திருக்கிறேன்.


ஓம் நமசிவய !

ஸ்ரீ காலபைரவாஷ்டகம்

பாடும் முறை: 

(தான தான தான தான தான தான தானனா

தான தான தான தான தான தான தானனா

தான தான தான தான தான தான தானனா

தான தான தான தான தான தான தானனா)


இந்திரன் பணிந்திடும் தாமரை பூந்திருவடி

சந்திரனும் நாகமும் சூடிடும் ஜடாமுடி

நாரதரும் சாதகரும் போற்றும் கருணா மூர்த்தி

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            1


முக்திதரும் முதல்வனாம் ப்ரகாச கோடி சூரியன்

சக்திதரும் நீலகண்ட கால கால முக்கண்ணன்

தூயத்தாமரை கண்களாம் சொக்கட்டானில் சூரனாம்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            2


சூல மழு பாச தண்ட பாணி முதல் காரணன்

மூல முதற்கடவுளன் அழிவிலா கரிய மேனியன்

பிணியிலா பெருமையன் முக்திசெல்வ தாண்டவப்பிரியன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            3


போகம் மோட்சம் அளிப்பவன் பிரசித்தி வடிவ அழகினன்

ஆகப் பெரும் அன்பு காட்டும் காவல் தெய்வம் ரட்சகன்

சலங்கை ஒலி இடையினன் அனைத்து உலக வடிவினன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            4


தர்மசேது காவலன் தீமை மார்க்க நாசகன்

கர்ம மாய மலங்கள் நீக்கி நற்சுகம் அளிப்பவன்

பொன் ஒளி சடையினன் உலகாளும் திருமேனியன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            5


ரத்ன பாதுகை சூடும் அழகொளி திருவடிவினன்

நித்யனாம் நிரஞ்சனாம் தூய்மை இஷ்ட தெய்வனன்

கூர்மை பற்கள் கொண்டவன் பாவ சத்ரு விநாசகன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            6


அட்டகாச ஒலியினன் பத்மண்டகோச அழிவினன்

சட்டநாதன் விழிகளால் பாவகுவியல் எரிப்பவன்

அஷ்ட சித்தி அருள்பவன் கபாலமாலை கழுத்தினன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            7


பூதங்களின் நாயகன் விசால கீர்த்தி தாயகன்

 காசிபதி மாந்தர் புண்ணிய பாவ பரிசோதகன்

அனைத்து உலக கர்த்தனாம் ஆதியன் நிறை நீதியன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            8


காலபைரவாஷ்டகம் மனிதவாழ்வில் குதூகலம்

ஞானம் முக்தி சாதனம் வழங்குமே உயர் புண்ணியம்

சோகம் மோகம் கோபம் லோபம் தாபம் பொடிபடும்

காலபைரவ மூர்த்தி திருவடியருளும் கிட்டுமே!                                    9

1 comment:

  1. நல்ல மற்றும் தரமான பொருட்களை வைத்து படிக்க வேண்டிய சித்தாந்த சைவம் என்று சொல்லப்படுவதற்கு தகுதியான காலபைரவாட்கம் வாழ்க பல்லாண்டுகள் ராதே கிருஷ்ணா

    ReplyDelete